உலகக் கோப்பை ஹாக்கி.. இந்திய அணி அறிவிப்பு.. ஆக.19 பாகிஸ்தானுடன் மோதல்!

 

அடுத்த மாதம் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான 20 பேர் கொண்ட பலம் வாய்ந்த இந்திய அணியை ஹாக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் இந்தப் புகழ்பெற்ற உலகக் கோப்பைத் தொடர் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அணியின் முன்னணி டிராக் ஃபிலிக்கரான ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர் மன்பிரீத் சிங், ஹர்திக் சிங் போன்ற நட்சத்திர வீரர்களுடன் இணைந்து இளம் திறமையாளர்களுக்கும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கோல்கீப்பர்கள்: மோஹித் எச்.எஸ், சூரஜ் கர்கேரா.

தற்காப்பு ஆட்டக்காரர்கள் - ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், ஜர்மன்பிரீத் சிங், ஜுக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், யஷ்தீப் சிவாச்.

மத்திய கள ஆட்டக்காரர்கள்: மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், நீலகண்ட சர்மா, ராஜீந்தர் சிங், ஆதித்யா அர்ஜுன் லாலேஜ்.

முன்கள ஆட்டக்காரர்கள்: மந்தீப் சிங், தில்பிரீத் சிங், அபிஷேக், சுக்ஜீத் சிங், ஷீலாநந்த் லக்ரா.

இந்தத் தொடரில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆகஸ்ட் 15 அன்று வேல்ஸ் அணியையும், ஆகஸ்ட் 17 அன்று இங்கிலாந்தையும், ஆகஸ்ட் 19 அன்று பாரம்பரிய எதிரியான பாகிஸ்தானையும் எதிர்கொள்ளவுள்ளது. 1975-ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையைக் கைப்பற்றும் தீவிர முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.