“பாஜக, அதிமுகவின் கபட நாடகம் எடுபடாது...” - அமைச்சர் கீதாஜீவன்!
பாஜக, அதிமுக கள்ளக்கூட்டணி நடத்தும் அரசியல் நாடகம் மக்களிடம் எடுபடாது என்று அமைச்சர் கீதாஜீவன் கூறியுள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சீண்டலுக்கு ஆளான விவகாரத்தில் கடந்த 2 வாரங்களாக மக்களை குழப்பி கபட நாடகம் நடத்தி வந்தன அதிமுகவும் பா.ஜனதாவும். திமுக ஆட்சிக்கு பெண்கள் அளிக்கும் அபரிமிதமான ஆதரவு கண்டு வயிறெரியும் பா.ஜனதா கள்ளக்கூட்டணி ‘தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை' என கதை கட்டி விஷமத்தனமானப் பிரசாரதை நடத்தி வந்தது.
சென்னை அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த வாரம் அதிமுக வட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டார். அந்த செய்தியை மறைக்க அதிமுக நடத்திய நாடகம் தான் ‘யார் அந்த சார்?' என்பது வெட்ட வெளிச்சமானது.
பா.ஜனதாவின் மாநில பொருளாதாரப் பிரிவுத் தலைவர் நிகழ்த்திய பாலியல் வன்கொடுமை அம்பலத்திற்கு வந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த தனது பேத்தி வயதுடைய 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பா.ஜனதா பிரமுகர் கைதாகியிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து, தன் வீட்டு முன்பு தன்னைத்தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை, தன் கட்சிக்காரரின் பாலியல் லீலைகளுக்காகக் கமலாலயத்தில் தன்னைத்தானே உமிழ்ந்து கொள்ளும் நிகழ்வுக்கு அண்ணாமலை தேதி குறித்து விட்டாரா?.
‘தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை' என வானத்திற்கும், பூமிக்கும் குதித்த தமிழிசை சவுந்தரராஜனும், குஷ்புவும் அமைதி நிலைக்குச் சென்றுவிட்டார்கள். எதுவுமே நடக்காதது போல அமைதி காக்கிறார்கள். மதுரையில் போராடிய குஷ்பு, அதே மதுரையில் பா.ஜனதா பிரமுகரால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏன் நீதி கேட்டுப் போராடவில்லை? அந்த சிலம்பு காணாமல் போய்விட்டதா?.
திமுக ஆட்சிக்கு எதிரான செய்திகளுக்கு எல்லாம் எட்டிப்பார்த்து வீராவேச நடிப்பைக் காட்டும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா பிரமுகர் பாலியல் விவகாரத்தில் ஏன் வாய் திறக்கவில்லை? கூட்டணிக்காக எடப்பாடி பழனிசாமி நடத்தும் கள்ள மெளனமா இது?.
இதுபோன்ற கொடூர குற்றவாளிகளை ஒடுக்கத்தான் முதல்-அமைச்சர் பெண்களுக்கு எதிரான குற்றம் செய்பவர்களுக்கு எதிரான தண்டனைகளைக் கடுமையாக்கி உள்ளார். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றவாளிகள் ஒரு நாளும் திமுக ஆட்சியில் தப்ப முடியாது. அதேநேரத்தில், கள்ளக்கூட்டணி நடத்தும் சிலரின் அரசியல் நாடகம் எல்லாம் மக்கள் அறிவர். இந்த நாடகங்கள் இனி ஒரு நாளும் மக்களிடம் எடுபடாது” என்று கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!