தனியுரிமைக்கு முக்கியத்துவம்... வாட்ஸ்அப்பில் புதிய பாதுகாப்பு அம்சம் அறிமுகம்!

 

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் செயலி, உலகளவில் சுமார் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு மிக முதன்மையான தகவல் தொடர்புத் தளமாகத் திகழ்ந்து வருகிறது. பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், அவர்களின் தனியுரிமைக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கவும் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ச்சியாகப் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், மெட்டா ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் பயனர்களுக்காக 'இன்காக்னிட்டோ சாட்'  என்ற புதிய தனியுரிமை அம்சத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

நவீன டிஜிட்டல் உலகில் மெட்டா ஏ.ஐ போன்ற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயனர்கள் தங்களின் அன்றாடத் தேவைகள் முதல் மிக முக்கியமான விபரங்கள் வரை அனைத்தையும் ஏ.ஐ உதவியுடன் ஆலோசித்து வருகின்றனர்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த 'இன்காக்னிட்டோ சாட்' அம்சம், பயனர்கள் தங்களின் உடல் நலம் சார்ந்த சந்தேகங்கள், நிதி மேலாண்மை மற்றும் பண விபரங்கள், தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகள் அல்லது அலுவலகம் சார்ந்த ரகசிய ஆவணங்கள் போன்ற மிக முக்கியமான விபரங்களை ஏ.ஐ-யுடன் முற்றிலும் பாதுகாப்பான சூழலில் பகிர்ந்து பேச வழிவகை செய்கிறது.

இந்த இன்காக்னிட்டோ சாட் அம்சத்தின் மிக முக்கியச் சிறப்பு, இதில் பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் தற்காலிகமானவையாக மட்டுமே இருக்கும். கூகுள் குரோம் போன்ற பிரவுசர்களில் உள்ள இன்காக்னிட்டோ விண்டோவைப் போலவே, வாட்ஸ்அப்பின் இந்த இன்காக்னிட்டோ சாட்டில் நீங்கள் பேசி முடித்தவுடன் அந்தச் சாட்கள் அனைத்தும் தானாகவே அழிந்துவிடும். இதனால் உங்கள் மொபைலை மற்றவர்கள் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டாலும், உங்களின் தனிப்பட்ட ஏ.ஐ உரையாடல்களை யாராலும் பார்க்க முடியாது. பயனர்களின் சாட் ஹிஸ்டரியை யாரும் திருட முடியாதபடி எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்பைத் தாண்டி, இந்த கூடுதல் இன்காக்னிட்டோ லேயர் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.