இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு - பங்குச்சந்தையில் பெரும் வீழ்ச்சி!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகப் பொருளாதாரம் பெரும் அதிர்வலைகளைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதால் சர்வதேச எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு, கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதன் நேரடித் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதால், நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சம் எழுந்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு இன்று (மே 12) ஒரே நாளில் 35 பைசா வரை சரிந்து, அமெரிக்க டாலருக்கு நிகராக 95.63 ரூபாய் என்கிற வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது. நாணய மதிப்பின் இந்தத் தொடர் சரிவு, இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்திப் பணவீக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர். ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்க மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எந்த அளவிற்குப் பலன் தரும் என வல்லுநர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மையால் இந்தியப் பங்குச்சந்தை இன்று நிலைகுலைந்து போனது. ஒரே நாளில் சென்செக்ஸ் 1,456 புள்ளிகளும், நிஃப்டி 436 புள்ளிகளும் மிகக் கடுமையான சரிவைச் சந்தித்தது முதலீட்டாளர்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. போர்ப் பதற்றம் தணிந்து சர்வதேச சந்தையில் அமைதி திரும்பினால் மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.