ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள்... மேற்குவங்கத்தில் பாஜக அதிரடி - அமித் ஷா உறுதி!

 

மேற்குவங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஊடுருவல் விவகாரம் மற்றும் மகளிர் நலன் குறித்துப் பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் எல்லை தாண்டிய ஊடுருவல் ஒரு பெரும் சவாலாக இருப்பதாகவும், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்தால், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் அனைத்து ஊடுருவல்காரர்களும் கண்டறியப்பட்டு உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ளதைப் போன்ற உதவித்தொகை திட்டத்தை அவர் அறிவித்தார். அதன்படி, மகளிர் மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ₹3,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.

அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அறிமுகப்படுத்தப்படும் என்ற முக்கிய வாக்குறுதியையும் அவர் முன்வைத்தார்.

மேற்குவங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக-வுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அமித் ஷாவின் இந்த வாக்குறுதிகள் அம்மாநில அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, "ஊடுருவல்" என்ற தேசியவாதக் கருப்பொருளுடன், "இலவசப் பேருந்து பயணம்" போன்ற மக்கள் நலத் திட்டங்களையும் பாஜக கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.