ஐடி துறையில் மீண்டும் அதிர்ச்சி... 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் முடிவு.. அடுத்தடுத்து ஆட்குறைப்பில் ஈடுபடும் நிறுவனங்கள்!
உலகளாவிய தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனம், செலவினங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனது நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 4,800 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தத் திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கை உலகெங்கும் உள்ள தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சிக்கு ஏற்ப, மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஏஐ பிரிவுகளில் தற்பொழுது பிரம்மாண்ட முதலீடுகளைச் செய்து வருகிறது. ஏஐ தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புகளுக்காகப் பில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருவதால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டுச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
நடப்பு 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் கடுமையாகச் சரிந்துள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான நிதிச் சரிவாக இது பார்க்கப்படுகிறது.
செலவினங்களைச் சமன் செய்து நிதி நிலையைச் சீரமைக்க, உலக அளவில் தங்களது பணியாளர் கட்டமைப்பில் 2.1 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் சுமார் 4,800 ஊழியர்கள் தங்களது வேலைகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே சுமார் 9,000 ஊழியர்களுக்குத் தாமாக முன்வந்து பணியிலிருந்து விலகும் வாய்ப்பை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த நேரடிப் பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மந்தநிலை மைக்ரோசாப்ட் நிறுவனத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை: அண்மையில் தான் மெட்டா நிறுவனம் தனது பிரிவுகளில் இருந்து 8,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்தது. இதேபோன்று அமேசான் நிறுவனமும் பெரிய அளவிலான ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் ஏஐ தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பப் பெரு நிறுவனங்கள் தங்களை மாற்றியமைத்து வருவதால், ஐடி துறையில் வேலை பாதுகாப்பு குறித்த கவலைகள் ஊழியர்கள் மத்தியில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகுப்புகள் குறித்து மைக்ரோசாப்ட் நிர்வாகமும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் தற்பொழுது ஆலோசித்து வருகின்றனர்.