ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைக் கொன்றுவிட்டு வீட்டில் குளித்து, உணவு சாப்பிட்டக் கொலையாளிகள் - வங்காளதேசத்தில் கொடூரம்!

 

வங்காளதேசத்தின் ரங்பூர் பகுதியில், ஓய்வுபெற்ற ஆசிரியர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அதே வீட்டில் குளித்து உணவருந்திச் சென்ற 2 பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

ரங்பூர் நகரின் மச்சுவாபாரா பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கணபதி சக்கரவர்த்தி (65), அவரது மனைவி பிரிதிலா (50), மகள் ஆகமி (23) மற்றும் மகன் பிரியம் (12) ஆகிய 4 பேரும் கொலைச் செய்யப்பட்டனர்.. பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை தொடர்பாகப் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சித்தார்த் தாஸ் (19) மற்றும் முக்தா தாஸ் (23) ஆகிய இருவரைப் காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆகஸ்ட் 20 அன்று இரவு, சக்கரவர்த்தியின் வீட்டு மொட்டை மாடியில் இருவரும் அத்துமீறி நுழைந்து போதைப்பொருள் ('யாபா') பயன்படுத்தியுள்ளனர். இதைக் தட்டிக்கேட்ட சக்கரவர்த்தியைக் கழுத்தை நெரித்துக் கொன்றனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது மனைவி, மகள் மற்றும் தங்களை அடையாளங்காட்டி விடுவான் என்ற அச்சத்தில் 12 வயது சிறுவன் என 4 பேரையும் அடுத்தடுத்து கொடூரமாகக் கொலை செய்தனர்.

கொலையைச் செய்த பின் அங்கிருந்து தப்பாமல், அதே வீட்டில் அமர்ந்து போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், குளித்துவிட்டு வீட்டில் இருந்த பேரீச்சம்பழம் மற்றும் வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் போலக் காட்டுவதற்காகத் தங்க நகைகளைத் திருடிக் கொண்டு, செல்போன்களைத் தண்ணீரில் போட்டுச் சிதைத்தனர். பின்னர் வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்தில் தெருவில் ஆள் நடமாட்டம் குறைந்த சமயம் பார்த்துத் தப்பியோடினர்.

சம்பவ இடத்தில் கொலையாளிகள் சாப்பிட்டுப் போட்ட பேரீச்சம்பழக் கொட்டைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ (DNA) தடயங்கள் மற்றும் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.