சென்னை திரும்பிய இரிடியம் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி கைது!

 

போலி ரிசர்வ் வங்கி ஆவணங்கள் மற்றும் இரிடியம் காப்பர் விற்பனை பெயரில் பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கின் முக்கிய குற்றவாளியைப் பஹ்ரைனில் இருந்து சென்னை திரும்பிய போது சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அண்டை மாநில மக்கள் மற்றும் தமிழகப் பொதுமக்களிடம் இரிடியம் காப்பர் விற்பனை மூலம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடமிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் வந்துள்ளதாக மோசடிக் கும்பல் நம்பவைத்துள்ளது. அத்தொகையை விடுவிக்கச் சேவை வரி மற்றும் அதிகாரிகளுக்குக் கமிஷன் தர வேண்டும் எனக் கூறி, முதலீட்டாளர்களுக்குப் பல மடங்கு லாபம் தருவதாக ஆசை காட்டியுள்ளனர். இதற்காக RBI, DRDO, BARC மற்றும் வருமான வரித்துறை பெயர்களில் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களைக் காட்டிப் பலரிடம் பணத்தை வசூலித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் அளித்த புகாரின் பேரில், 2025-இல் சேலம் மாநகர திட்டமிட்ட குற்றங்கள் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிபிசிஐடி நடத்திய தீவிர விசாரணையில் சுமார் 50 நபர்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. இதுவரை இவ்வழக்கில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகள், பிரிண்டர்கள், போலி காசோலைகள், போலி ஆவணங்கள் மற்றும் இரிடியம் எனக் கூறி ஏமாற்றப் பயன்படுத்தப்பட்ட கற்கள் மற்றும் உலோகப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சுரேஷ்குமார் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த விபரங்கள்:

போலி ஆவணத் தயாரிப்பு: சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட சுரேஷ்குமார், பஹ்ரைன் நாட்டில் இருந்தபடியே RBI மற்றும் UOB ஆகியவற்றின் போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்து, அதற்குச் சன்மானமாக ரூ.45,000 பெற்றுள்ளார். அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்ததால், கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு எதிராகப் லுக்அவுட் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.

ஜூலை 31ம் தேதியன்று பஹ்ரைனில் இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே மடக்கிப் பிடித்த சிபிசிஐடி, ஆகஸ்ட் 01 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தது. தமிழகத்தில் இதுவரை இரிடியம் மற்றும் போலி ரிசர்வ் வங்கி ஆவண மோசடி தொடர்பாகக் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையில் (CB-CID) மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.