லிவ்-இன் காதலியைக் கொன்று தோட்டத்தில் புதைத்த காதலன் தலைமறைவு!

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், காதலியுடன் லிவ்-இன் முறையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், அவரைப் படுகொலை செய்து வீட்டின் தோட்டத்தில் புதைத்துவிட்டுத் தலைமறைவாகியுள்ள கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் 32 வயதான கிரண் என்ற பெண்ணும், 22 வயதான பர்வேஷ் என்ற இளைஞரும் கடந்த இரண்டு மாதங்களாக வாடகை வீட்டில் லிவ்-இன் முறையில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் வீட்டைப் பார்க்கச் சென்ற போது வீடு பூட்டப்பட்டுக் கிடந்துள்ளது. அருகில் உள்ள தோட்டத்தில் புதிதாக மண் தோண்டப்பட்டுக் கிடந்ததையும், மண்ணுக்குள் இருந்து ஒரு பெண்ணின் கை வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைக் கண்டும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார்.

நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதில், அது கிரண் என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரணுடன் வாழ்ந்து வந்த பர்வேஷ் தான் கடந்த 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு அவரைக் கொலை செய்துவிட்டு உடலைத் தோட்டத்தில் புதைத்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள பர்வேஷைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.