வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 2,000 டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்வாகம் நோட்டீஸ் - உடனடியாகப் பணிக்குத் திரும்ப எச்சரிக்கை!

 

கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த ஊழியர்கள் மீதான பணியிடை நீக்க நடவடிக்கையைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 2,000 டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிர்வாகம் தரப்பிலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு நாட்களில் மட்டும் முறைகேடுகளில் ஈடுபட்ட 217 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டனர்.

ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆங்காங்கே திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நோட்டீஸ்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 2,000 ஊழியர்களுக்குத் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் கேள்வி எழுப்பி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சம்பள உயர்வு மற்றும் இதர செலவுகளுக்கு அரசே பணம் வழங்கும் நிலையில், இதுபோன்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், தவறினால் அவர்கள் மீதும் சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் கடுமையாக எச்சரித்துள்ளது.