“மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு தான்.. சின்னத்தை முடக்க முடியாது!” - கறார் காட்டிய நீதிமன்றம் .. அப்செட்டில் ராமதாஸ்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) 'மாம்பழம்' சின்னம் யாருக்கு என்பதில் நிலவி வந்த இழுபறியில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று அதிரடி முடிவை அறிவித்துள்ளது. சின்னத்தை முடக்கக் கோரிய ராமதாஸ் தரப்பின் மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

பாமகவின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினை காரணமாக, 'மாம்பழம்' சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் முடக்கி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

"சின்னத்தைப் பயன்படுத்துவதில் வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். எனவே, உரிமையியல் வழக்கு முடியும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும். இரு தரப்பினரும் பொதுச் சின்னத்தில் போட்டியிடத் தயார்" என வாதிடப்பட்டது.

"வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகிவிட்டது. இந்தச் சூழலில் நீதிமன்றம் தேர்தல் பணிகளில் தலையிட முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது. "சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தை அணுகாமல், திட்டமிட்டு முடக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்று வாதிட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, "மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கு ஒதுக்கீடு செய்யக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது" என்று கூறி, ராமதாஸ் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை நாளைக்குத் தள்ளிவைத்துள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த முடிவின் மூலம், தற்போதைய நிலையில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான வேட்பாளர்கள் 'மாம்பழம்' சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இது ராமதாஸ் தரப்பிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.