மேகதாது விவகாரம்... இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டம்!

 

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினசரி 3,500 கனஅடி வீதம் தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், தங்கள் மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்றும், குடிநீர் தேவைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டி இருப்பதால் தண்ணீரைத் திறக்க இயலாது என்றும் கர்நாடக அரசு நிலைப்பாடு எடுத்துள்ளது.

மேகதாதுவில் மேலாண்மை அனுமதியின்றி அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்குத் தமிழக அரசு தீவிர எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறது. இது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில், குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கும் குடிநீர் தேவைக்கும் உரிய நீரை வழக்கமான விகிதத்தில்  கர்நாடகா வழங்க உத்தரவிடக் கோருவது.

முறைப்படுத்தும் குழுவின் பரிந்துரையை எதிர்த்துக் கர்நாடகா மேல்முறையீடு செய்யவுள்ள நிலையில், ஆணையம் இதில் எடுக்கும் இறுதி முடிவு இரு மாநிலங்களுக்கும் கட்டாயமாக்கப்படும். இக்கூட்டத்தின் முடிவுகள் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திலும், இரு மாநிலங்களுக்கு இடையேயான அடுத்தகட்ட அரசியல் மற்றும் சட்டப்பூர்வ நகர்வுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.