தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கொட்டப் போகும் கனமழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்: ஈரோடு, நாமக்கல் மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.