பெண் குழந்தையாய் பிறந்து 12 வயதில் ஆணாக மாறும் அதிசயம்... உலகையே வியக்க வைக்கும் 'குவெடோசெஸ்' கிராமம்!

 

இயற்கையின் விந்தைகளுக்கு அளவே இல்லை என்பதற்குச் சான்றாக, டொமினிகன் குடியரசில் உள்ள லா சலினாஸ் என்ற கிராமம் உலகையே அதிர வைத்துள்ளது. இந்தக் கிராமத்தில் பிறக்கும் சில பெண் குழந்தைகள், தங்களது 12 வயதில் பருவமடையும் காலத்தில் திடீரென ஆண்களாக மாறும் அதிசய நிகழ்வு பல தசாப்தங்களாகத் தொடர்ந்து வருகிறது. உள்ளூர் மக்களால் இத்தகைய குழந்தைகள் ‘குவெடோசெஸ்’ என்று அழைக்கப்படுகின்றனர். இதற்கு '12 வயதில் ஆண் உறுப்பு கொண்டவர்கள்' என்று பொருள்.

இது ஏதோ மாய மந்திரமோ அல்லது அற்புதமோ அல்ல; இதன் பின்னணியில் ஒரு அபூர்வமான மருத்துவக் காரணம் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கருவில் இருக்கும் போது குழந்தைகளுக்குத் தேவையான '5-ஆல்ஃபா ரிடக்டேஸ்' என்ற நொதி குறைபாட்டால், ஆண் குழந்தைகளுக்குரிய உறுப்புகள் வளர்ச்சியடையாமல் பெண் குழந்தையைப் போன்ற தோற்றத்துடன் பிறக்கின்றனர். பின்னர் 12 வயதை எட்டும்போது, உடலில் ஏற்படும் அதீத டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் மாற்றங்களால், மறைந்திருந்த ஆண் உறுப்புகள் வளர்ச்சி பெற்று அவர்கள் முழுமையான ஆண்களாக மாறுகின்றனர்.

இந்த விசித்திரமான மரபணு மாற்றம் குறித்து மருத்துவ உலகம் தொடர்ந்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. லா சலினாஸ் கிராமத்தில் ஒவ்வொரு 90 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. வளர்ந்த பிறகு அவர்கள் சமூகத்தில் ஆண்களாகவே அங்கீகரிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இயற்கையின் இந்த வினோதமான படைப்பு, பாலினம் குறித்த நமது பொதுவான பார்வையை மறுபரிசீலனை செய்ய வைப்பதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.