கைக்குழந்தையுடன் சட்டமன்றத்திற்கு வந்த தவெக எம்.எல்.ஏ. பல்லவி!
தவெக தலைமையிலான புதிய அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமைச் செயலகத்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னை திரு.வி.க. நகர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.பல்லவி தனது கைக்குழந்தையுடன் சட்டப்பேரவைக்கு வருகை தந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலின் போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த பல்லவி, திரு.வி.க. நகர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தலில் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் கே.எஸ்.ராமச்சந்திரனை 22,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்று முதன்முறையாக எம்.எல்.ஏ-வானார். சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்குத் தனது கட்சியின் பெயரான 'TVK' என்று பெயர் சூட்ட உள்ளதாக அறிவித்திருந்தார்.
கட்சி சார்ந்த முக்கியக் கூட்டங்களுக்குத் தனது குழந்தையுடன் சென்று வந்த எம்.எல்.ஏ. பல்லவி, தற்போது அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடரிலும் பங்கேற்பதற்காகத் தனது கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளார். தாய்மை மற்றும் மக்கள் பணியைச் சமமாக எடுத்துச் செல்லும் அவரின் இந்தச் செயல் சக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.