டிஜிட்டல் உலகின் அசுர தாகம்... ஒரு மெயில் அனுப்பினால் அரை லிட்டர் தண்ணீர் காலி! செயற்கை நுண்ணறிவால் வறண்டுக் கொண்டிருக்கும் உலக நாடுகள்!

 

உலகையே தன்பக்கம் திருப்பிப் போட்டுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், உலகெங்கிலும் உள்ள நன்னீர் வளங்கள் மிக வேகமாக வற்றி வருவதாக அதிர்ச்சியூட்டும் புதிய அறிவியல் புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் மூலம் வெறும் 100 வார்த்தைகள் கொண்ட ஒரு சிறிய மின்னஞ்சலை எழுதும் போது கூட, சுமார் 519 மில்லிலிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ரிவர்சைடு கிளையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பெங்பெய் லி, ஷாவோலெய் ரென் மற்றும் குழுவினர் 'கம்யூனிகேஷன்ஸ் ஆஃப் தி ACM' இதழில் வெளியிட்டுள்ள சக மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் இந்த இந்த விபரங்கள் அம்பலமாகியுள்ளன.

நவீன ஏஐ உள்கட்டமைப்பை இயக்கும் தரவு மையங்களில் உள்ள சர்வர்களைக் குளிர்விக்கப் பயன்படும் 'நேரடித் தண்ணீர்' மற்றும் அந்த சர்வர்கள் இயங்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தேவைப்படும் 'மறைமுகத் தண்ணீர்' ஆகிய இரண்டையும் கணக்கில் கொண்டே இந்த 519 மில்லிலிட்டர் (கிட்டத்தட்ட ஒரு தண்ணீர் பாட்டில் அளவு) கணக்கிடப்பட்டுள்ளது.

தினமும் கோடிக்கணக்கான பயனர்கள் மேற்கொள்ளும் வினவல்களை கணக்கிட்டால், 2027-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய AI உள்கட்டமைப்பு மட்டும் ஆண்டுதோறும் 4.2 முதல் 6.6 பில்லியன் கன மீட்டர் தண்ணீரைப் பயன்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஐக்கிய ராஜ்ஜியத்தின் ஆண்டு நீர் நுகர்வில் பாதியளவாகும்!

நவீன ஏஐ தொழில்நுட்பத்தின் மையமாக விளங்கும் உயர்நிலை வரைகலைச் செயலாக்க அலகுகளின் சில்லுகள் ஒவ்வொன்றும் 300 முதல் 700 வாட்ஸ் வரை வெப்பத்தை வெளியேற்றுகின்றன. இந்த அதீத வெப்பத்தை தணிக்க 'ஆவியாதல் குளிர்விப்பு' முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த அமைப்பிற்குள் செலுத்தப்படும் தண்ணீரில் 80 சதவீதத்திற்கும் அதிகமான நீர், நீராவியாக மாறி வளிமண்டலத்தில் நிரந்தரமாகக் கலந்து இழக்கப்படுகிறது. 10,000 மக்கள் வசிக்கும் ஒரு நகரத்தின் ஒட்டுமொத்த தினசரித் தேவையை விட, ஒரு நவீன ஹைப்பர்ஸ்கேல் தரவு மையம் ஒரு நாளில் அதிக தண்ணீரை அசுரத்தனமாகக் குடித்துத் தீர்க்கிறது.

அமெரிக்க எரிசக்தித் துறையின் 2024-ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2023-ல் மட்டும் தரவு மையங்கள் குளிரூட்டலுக்காக நேரடியாக 17.4 பில்லியன் கேலன் நீரையும், மின்சார உற்பத்திக்காக மறைமுகமாக 211 பில்லியன் கேலன் நீரையும் பயன்படுத்தியுள்ளன. இந்த சுமை 2028-க்குள் மேலும் மும்மடங்காக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் நிலைத்தன்மை அறிக்கைகளே இந்த நீர் தட்டுப்பாட்டை அப்பட்டமாக ஒப்புக் கொண்டுள்ளன.

கூகிள் தனது 2024 சுற்றுச்சூழல் அறிக்கையில், அந்த ஆண்டின் மொத்த நீர் நுகர்வு 8.1 பில்லியன் கேலன்கள் என்றும், அதில் 95% தரவு மையங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட முறையே 8%, 17% மற்றும் 20% என அசுர வேகத்தில் உயர்ந்து, மூன்றே ஆண்டுகளில் கூகிளின் நீர் நுகர்வு இருமடங்காக மாறியுள்ளது. இதற்கு ஏஐ பணிச்சுமையே முதன்மைக் காரணம் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் 2022-ல் தனது நீர் பயன்பாடு 34% அதிகரித்து 1.7 பில்லியன் கேலன்களாக உயர்ந்ததாக அறிவித்தது. குறிப்பாக, அயோவாவின் வெஸ்ட் டெஸ் மொய்ன்ஸில் GPT-4 மாடலின் பயிற்சிகள் நடந்த போது, ஜூலையில் 11.5 மில்லியன் கேலனும், ஆகஸ்டில் 13.4 மில்லியன் கேலனும் தண்ணீர் உறிஞ்சப்பட்டுள்ளது.

மெட்டா 2023-ல் உலகளவில் சுமார் 813 மில்லியன் கேலன் தண்ணீரைப் பயன்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய கிளவுட் உள்கட்டமைப்பை இயக்கும் அமேசான் நிறுவனம் தனது மொத்த நுகர்வுப் புள்ளிவிவரங்களை இன்னமும் வெளியிடாமல் மூடி மறைத்து வருகிறது.

மிகப் பெரிய கொடுமை என்னவென்றால், உலகிலேயே கடுமையான நீர் பற்றாக்குறை நிலவும் பகுதிகளில் தான் இந்த ஏஐ தரவு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 42% தண்ணீரையும், கூகிள் நிறுவனம் தனது 15% நன்னீரையும் கடுமையான நீர் பற்றாக்குறை உள்ள பிராந்தியங்களில் இருந்தே எடுக்கின்றன.

இதன் விளைவாக, 15 ஆண்டு கால வறட்சியால் தவித்து வரும் சிலியின் சாண்டியாகோ நகருக்கு அருகே திட்டமிடப்பட்டிருந்த 200 மில்லியன் டாலர் மதிப்பிலான கூகிளின் தரவு மையத் திட்டத்தைச் சுற்றுச்சூழல் நீதிமன்றம் அதிரடியாக நிறுத்தி வைத்துள்ளது. இதேபோல், ஒரு நூற்றாண்டில் இல்லாத மிக மோசமான வறட்சியைச் சந்தித்து வரும் மெக்சிகோவின் கெரெட்டாரோ பகுதியிலும், அமெரிக்காவின் அரிசோனாவிலும் 14 பில்லியன் டாலர் மதிப்பிலான தரவு மையத் திட்டங்களை உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் நிறுவனங்கள் கைவிட்டுள்ளன அல்லது முடக்கியுள்ளன.