பச்சிளம் குழந்தையை வீசிவிட்டு சென்ற தாய்... கள்ளக்காதலனுக்குப் பிறந்ததால் வீசி எறிந்ததாக வாக்குமூலம்!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைத் தாய் ஒருவரே டாஸ்மாக் கடை அருகே வீசிச் சென்ற கல்நெஞ்சச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வடகரை பகுதியில் உள்ள மதுக்கடை அருகே ஆட்டோவில் வந்து இறங்கிய அந்த இளம் பெண், கையில் இருந்த குழந்தையைச் சாலையில் கிடத்திவிட்டுத் தப்ப முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அந்தப் பெண்ணையும் ஆட்டோ ஓட்டுநரையும் மடக்கிப் பிடித்து குழந்தையை மீட்டதுடன், உம்ராபாத் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தையைக் கைவிட முயன்ற பெண் வீராங்குப்பம் பகுதியைச் சேர்ந்த லோகேஸ்வரி என்பது தெரியவந்தது. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபி என்பவருடன் தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த கள்ளக்காதல் உறவினால் பிறந்த குழந்தை என்பதால், சமூகத்திற்குப் பயந்து குழந்தையைத் தெருவில் விட்டுச் செல்ல முயன்றதாக அந்தப் பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் பல வேண்டுதல்கள் செய்து வரும் நிலையில், பெற்ற குழந்தையை இப்படித் தெருவில் வீசிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்குத் தற்போது உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், லோகேஸ்வரி மற்றும் அவருக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் கோபி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனிதாபிமானமற்ற இந்தச் செயல் ஆம்பூர் வட்டாரத்தில் இன்று மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.