புற்றுநோயைத் தடுக்கும் 'mRNA' தடுப்பூசி - மருத்துவ உலகில் மாபெரும் சாதனை!
புற்றுநோய் மீண்டும் உருவாகாமல் தடுக்கும் வகையில் mRNA தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும் தடுப்பூசியின் இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனைகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மருத்துவ உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபல மாடர்னா மற்றும் மெர்க் நிறுவனங்கள் இணைந்து இந்த புதிய பரிசோதனை mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளன.
'மெலனோமா' என்ற கொடிய தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம் கட்டிகள் அகற்றப்பட்ட பிறகு, இந்தத் தடுப்பூசி அவர்களுக்குச் செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
மனித உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி, புற்றுநோய் செல்களைக் கண்டறிந்து அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி, புற்றுநோய் மீண்டும் உருவாவதைத் தடுக்கும் மிகச்சிறந்த திறனைக் கொண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்போது இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனையில் உள்ள இந்த mRNA தடுப்பூசி, விரைவில் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் புற்றுநோய் மருத்துவத்தில் இது ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.