முக்குலத்தோர் சமூகத்தினர் அதிருப்தி.. விரைவில் பசும்பொன் செல்கிறார் முதல்வர் விஜய்; தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த ஏற்பாடு!

 

சமீபத்தில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க இயலாமல் போனதால் தேவர் சமுதாய மக்கள் மத்தியில் எழுந்த அதிருப்தியையும் எதிர்ப்பையும் போக்கும் வகையில், தமிழக முதலமைச்சர் விஜய் விரைவில் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுநாள் வரையில் தமிழக முதல்வராக இருந்தவர்கள் தேவர் ஜெயந்தி குருபூஜையன்று பசும்பொன் கிராமம் சென்று நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்தி வந்தனர். முன்னாள் முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா என ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தி அன்று நேரில் சென்று மரியாதை செலுத்தி வந்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் மட்டுமல்லாமல் பிற அரசியல் கட்சித் தலைவர்களும் தேவர் ஜெயந்தியன்று நேரில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் குருபூஜையன்று முதல்வர் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தாதது முக்குலத்தோர் சமூகத்தினரிடையே சலசலப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

வழக்கமாக தேவர் ஜெயந்தியன்று பத்திரிக்கைகளில் விளம்பரமும் வரும். இந்த முறை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா பத்திரிக்கை விளம்பரங்களிலும் புறக்கணிக்கப்பட்டதாக அதிருப்தி நிலவி வருகிறது. 

முதலமைச்சர் விஜய் கடைசி நேரத்தில் தனது பசும்பொன் பயணத்தைத் தவிர்த்தார். அதற்குப் பதிலாக சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எனினும், குருபூஜை நாளன்று பசும்பொன்னிற்கு வராததால் தேவர் சமுதாய மக்கள் மற்றும் தென்மாவட்ட ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியும் கோபமும் நிலவுவது முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்றுள்ளது.

மற்ற அரசியல் தலைவர்களைப் போலத் தானும் தேவர் ஜெயந்தியைப் புறக்கணித்து விட்டதாக மக்கள் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக உள்ளார். தேவர் அய்யா மீது தான் கொண்டுள்ள உண்மையான பற்றை வெளிப்படுத்தும் வகையிலும், மக்களின் மனக்குறையைப் போக்கும் வகையிலும் கூட்ட நெரிசல் இல்லாத ஒரு சாதாரண நாளில் பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்த அவர் முடிவு செய்துள்ளார்.

பசும்பொன் செல்லத் தவறினால் தென்மாவட்டங்களில் அதிருப்தி மேலும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்துள்ள முதலமைச்சர் விஜய், இதற்கான பயணத் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார். முதலமைச்சரின் இந்தச் சிறப்புப் வருகையை முன்னிட்டு, தென்மாவட்டங்களைச் சேர்ந்த தவெக  முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்யத் தயாராகி வருகின்றனர்.