இசையுலகின் கானக்குயில் எஸ். ஜானகி...  முழுமையான வாழ்க்கை வரலாறு!

 

தென்னிந்தியத் திரையிசை வரலாற்றில் தனக்கெனத் தனிச் சாம்ராஜ்யத்தை உருவாக்கி, 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களால் ஒட்டுமொத்த இந்தியாவையும் வசீகரித்தவர் 'கான கோகிலா' எஸ். ஜானகி அம்மா. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகத் தனது 88-வது வயதில் அவர் இயற்கை எய்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற கிராமத்தில், 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரு தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் ராமமூர்த்தி - சத்யவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார் ஜானகி. சிறு வயதிலேயே இசையின் மீது அளப்பரிய ஆர்வம் கொண்டிருந்த அவர், புகழ்பெற்ற நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சிகளைப் பெற்றார்.

இசையில் தன் திறமையை வளர்த்துக் கொண்ட அவர், பின்னாளில் சென்னைக்கு இடம்பெயர்ந்து, ஏவிஎம் ஸ்டூடியோவில் ஒப்பந்த அடிப்படையில் 'கோரஸ்'  பாடும் பாடகியாகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். 1956-ஆம் ஆண்டு, தனது 18-வது வயதில் அகில இந்திய வானொலி நடத்திய தேசிய அளவிலான பாட்டுப் போட்டியில் அபாரமாகப் பாடி இரண்டாம் இடம் பிடித்தார். இதற்காக அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் கரங்களால் உயரிய பரிசைப் பெற்றார்.

1957-ல் வெளியான 'விதியின் விளையாட்டு' என்ற தமிழ்த் திரைப்படத்தில் இடம்பெற்ற "பெண் என் ஆசை பாழானது ஏனோ" என்ற பாடலே இவரது முதல் திரைப்பாடலாகும். இப்பாடலைப் பாடிய அடுத்த நாளே, 'எம்எல்ஏ' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் புகழ்பெற்ற பாடகர் கண்டசாலாவுடன் இணைந்து "நீயாசா அடியார்" என்ற பாடலைப் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

அடுத்த 25 ஆண்டுகளிலேயே தென்னிந்திய மொழிகள் மட்டுமன்றி கொங்கணி, துளு, சௌராஷ்டிரம், இந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் எனப் பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடினார். அத்துடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளையும் சரளமாக எழுதவும் பேசவும் கற்றிருந்தார்.

ஜானகி அம்மா ஒரு சிறந்த பாடகி மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களைத் தாமே சொந்தமாக எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். மேலும், 'மௌனப் போராட்டம்' என்ற தெலுங்குத் திரைப்படத்திற்குத் தகுதியான இசையமைப்பாளராகப் பணியாற்றி முத்திரை பதித்தார்.

1992-ஆம் ஆண்டில் இலங்கை சென்றிருந்தபோது, இவரது இசைத் தொண்டினைப் பாராட்டி அவருக்கு 'ஞான கான சரஸ்வதி' என்ற உயரிய பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

எஸ். ஜானகி அம்மாவின் கணவர் ராம் பிரசாத் ஆவார். அவர் கடந்த 1997-ஆம் ஆண்டு காலமானார். இவர்களது ஒரே மகனான முரளி கிருஷ்ணாவும் கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். மகனின் மறைவிற்குப் பிறகு, மைசூருவில் தனது மருமகள் உமா மற்றும் பேரப்பிள்ளைகளுடன் ஜானகி அம்மா வசித்து வந்தார்.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் திரையுலகை ஆண்ட ஜானகி அம்மா, மத்திய மற்றும் பல்வேறு மாநில அரசுகளிடம் இருந்து 33-க்கும் மேற்பட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

தேசிய திரைப்பட விருதுகள் (4 முறை):

1976 – 'பதினாறு வயதினிலே' (தமிழ்) – செந்தூரப்பூவே செந்தூரப்பூவே

1980 – 'ஒப்போல்' (மலையாளம்) – எட்டுமனூரம்பழத்தில்

1984 – 'சித்தாரா' (தெலுங்கு) – வென்னெல்லோ கோடாரி அந்தம்

1992 – 'தேவர் மகன்' (தமிழ்) – இஞ்சி இடுப்பழகா

மாநில அரசுகளின் விருதுகள்:

தமிழ்நாடு அரசு: 7 முறை சிறந்த பின்னணிப் பாடகி விருது மற்றும் 1986-ல் 'கலைமாமணி' விருது.

கேரள அரசு: 14 முறை சிறந்த பின்னணிப் பாடகி விருது மற்றும் 2002-ல் 'மாநில சிறப்பு விருது'.

ஆந்திர அரசு: 10 முறை சிறந்த பின்னணிப் பாடகி விருது.

திரையுலகின் ஆரம்பகால இசை மேதைகளான விஸ்வநாதன் - ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், ஏ.எம். ராஜா, டி.ஆர். பாப்பா முதல், இவருடன் பிரிக்க முடியாத கூட்டணியாக விளங்கிய இசைஞானி இளையராஜா, கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், டி. ராஜேந்தர், வித்யாசாகர், எஸ்.ஏ. ராஜ்குமார் மற்றும் அடுத்த தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, தீனா, அனிருத் வரை அனைத்து ஜாம்பவான்களின் இசையிலும் பாடித் தன் குரலால் படங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார்.

2013-ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு நாட்டின் உயரிய விருதுகளுள் ஒன்றான 'பத்ம பூஷண்' விருதை அறிவித்தது. ஆனால், இத்தனை தசாப்த காலத் தனது அரிய இசைச் சேவைக்கு இந்த விருது மிகவும் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது என்று கூறி, ஜானகி அம்மா அந்த விருதை ஏற்க கம்பீரமாக மறுத்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து, 2016-ஆம் ஆண்டு பாடல்கள் பாடுவதில் இருந்தும், திரையுலகில் இருந்தும் அதிகாரப்பூர்வமாகத் தனது ஓய்வை அறிவித்துவிட்டுத் தனது குடும்பத்துடன் அமைதியான வாழ்வை மேற்கொண்டார். ஜானகி அம்மா தற்பொழுது நம்மிடையே இல்லை என்றாலும், அவர் விட்டுச் சென்ற பல்லாயிரக்கணக்கான காந்தக் குரல் பாடல்கள் காலமுள்ள வரை காற்றில் மிதந்து கொண்டே இருக்கும்.