விண்ணைப் பிளந்த ‘நமச்சிவாய’ கோஷம்... மயிலையில் தேரோட்டம் - மாட வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! 

 

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் 7-ஆம் நாள் நிகழ்வான தேரோட்டம் இன்று அதிகாலை தொடங்கியது. அதிகாலை 6:30 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் கபாலீஸ்வரரும், கற்பகாம்பாளும் எழுந்தருளினர். காலை சரியாக 7 மணியளவில் 'தென்னாடுடைய சிவனே போற்றி' மற்றும் 'கபாலீசா' முழக்கங்களுக்கு இடையே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்தனர். கிழக்கு மாட வீதியில் தொடங்கிய தேரோட்டம், தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு மாட வீதிகள் வழியாக நிலைக்கு வரும்.

தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாப்பூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. வீடுகள் மற்றும் கடைகளின் வாசல்களில் வண்ணக் கோலமிட்டு, நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கிப் பக்தர்கள் இறைவனை வரவேற்று வருகின்றனர். தேரோட்டத்தைத் தொடர்ந்து, நாளை (மார்ச் 30, திங்கட்கிழமை) உலகப் புகழ்பெற்ற அறுபத்து மூவர் திருவிழா நடைபெறவுள்ளது. இதில் 63 நாயன்மார்களும் பல்லக்குகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள்.

தேரோட்டம் மற்றும் நாளை நடைபெறவுள்ள அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு, மயிலாப்பூர் பகுதியில் இன்றும் நாளையும் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கச்சேரி சாலை, ஆர்.கே.மடம் சாலை மற்றும் லஸ் சந்திப்பு பகுதிகளில் வாகனங்கள் செல்லக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.