தீவிரமடையும் நீட் விவகாரம்... மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூத்த அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடங்கிய மாணவர்களின் போராட்டம் தற்போது நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. டெல்லியைத் தொடர்ந்து சென்னை, பெங்களூரு, பாட்னா, மும்பை உள்ளிட்ட பல பெருநகரங்களில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும், மத்திய அரசு இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் கடுமையான அழுத்தத்தை அளித்து வருகின்றன. போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்தியக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் முக்கிய மூத்த அமைச்சர்களுடன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவது குறித்துப் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே அரசின் முதன்மை முன்னுரிமை எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர், நீட் வினாத்தாள் கசிவில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
நீட் முறைகேடுகள் தொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மறுதேர்வு மற்றும் அதன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.