ஜூன் 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்... சிலிண்டர் விலை, டோல் கட்டணம், வங்கிச் சேவைகளில் வரவிருக்கும் மாற்றங்கள்!
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை திருத்தம் மற்றும் நிதி சார்ந்த விதிகளில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜூன் 1-ம் தேதி முதல் நாட்டின் பொதுமக்களின் தினசரி பட்ஜெட்டைப் பாதிக்கும் வகையிலான சில முக்கிய விதிமுறை மாற்றங்கள் மற்றும் விலை திருத்தங்கள் அமலுக்கு வரவுள்ளன.
1. எல்பிஜி மற்றும் இயற்கை எரிவாயு விலை திருத்தம்:
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையைக் கணக்கில் கொண்டு, மாதத்தின் முதல் நாளில் புதிய விலைப் பட்டியலை வெளியிடுகின்றன. கடந்த மே 1-ம் தேதி நிலவரப்படி வணிகப் பயன்பாட்டுக்கான (19 கிலோ) சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்டிருந்தது. ஜூன் 1 அன்று வணிக மற்றும் வீட்டு உபயோக (14.2 கிலோ) எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் புதிய திருத்தங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி (CNG) மற்றும் வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்படும் பிஎன்ஜி எரிவாயு விலைகளும் மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிவாயு விநியோக உள்கட்டமைப்பு வசதி உள்ள பகுதிகளில், நுகர்வோர்கள் எல்பிஜி சிலிண்டர் இணைப்பில் இருந்து பிஎன்ஜி (PNG) இணைப்புக்கு மாறுவதற்கான காலக்கெடுவும் இதனுடன் தீவிரப்படுத்தப்பட உள்ளது.
வங்கி வட்டி விகிதங்கள் மற்றும் ஏடிஎம் கட்டணங்கள்:
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் மற்றும் கடன் கொள்கை ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், நாட்டின் முன்னணி பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் தங்களது சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைக்க உள்ளன. ஜூன் மாதத் தொடக்கத்தில் சில முன்னணி வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான (Savings Account) வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கத் திட்டமிட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான இலவச வரம்பிற்குப் பிந்தைய கூடுதல் கட்டணங்கள் மற்றும் வங்கிகளில் இருந்து அனுப்பப்படும் எஸ்எம்எஸ் (SMS) விழிப்பூட்டல்களுக்கான சேவை வரிக் கட்டணங்களைச் சில வங்கிகள் உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சூரியசக்தி திட்டங்களில் புதிய ஏஎல்எம்எம் விதி:
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப விதிகளை நடைமுறைப்படுத்துகிறது.
சூரியசக்தி திட்டங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட மாடல்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் பட்டியலின் இரண்டாம் கட்ட விதிகளை நீட்டிக்கப் போவதில்லை என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
சுங்கச்சாவடி கட்டணங்கள்:
தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் ஜூன் 1ம் தேதி முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களுக்கான கட்டணம், மாதாந்திர பயணத்திற்கான பாஸ் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது.
ஜூன் 1 முதல் மத்திய அரசின் 'பிஎம் சூர்ய கர்' போன்ற மானியத்துடன் கூடிய சோலார் திட்டங்களின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டுத் தரவரிசைப் பட்டியலின் படி உள்ள சோலார் செல்கள் மற்றும் இன்வெர்ட்டர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் பயனாளிகளுக்கு அரசு வழங்கும் மானியத் தொகையைப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த மாற்றங்கள் குறித்த துல்லியமான புதிய கட்டண விகிதங்கள் மற்றும் வங்கிகளின் தனிநபர் வழிகாட்டுதல்கள் ஜூன் 1-ஆம் தேதி காலை அதிகாரப்பூர்வமாக அந்தந்த நிறுவனங்களால் தனித்தனியே அறிவிக்கப்படவுள்ளன.