மே 1 முதல் புதிய விதிமுறைகள் அமல்... சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், மே மாதம் நடைபெற உள்ள கோடை விழாவை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மாவட்ட காவல்துறை அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. வரும் மே 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தின்படி, மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா கார்கள் காட்டேரி சந்திப்பிலிருந்து திரும்பி சேலாஸ், கேத்தி பாலாடா மற்றும் லவ்டேல் வழியாக நகருக்குள் வர வேண்டும்.
அதேபோல் கூடலூர் செல்லும் சுற்றுலா வாகனங்கள் லவ்டேல் ரயில்வே நிலையம் மற்றும் பிங்கர்போஸ்ட் வழியாகத் திருப்பி விடப்படும். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், நகரின் முக்கிய சாலைகளில் நெரிசலைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளியூர் பேருந்துகள் மற்றும் மேக்சிகேப் வாகனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குன்னூரிலிருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் ஆவின் வாகன நிறுத்துமிடத்திலும், கோத்தகிரியிலிருந்து வரும் வாகனங்கள் அரசு கலைக்கல்லூரி மைதானத்திலும் நிறுத்தப்பட வேண்டும். அங்கிருந்து சுற்றுலா தலங்களுக்குச் செல்ல பயணிகள் அரசு சுற்றுப் பேருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உதகையிலிருந்து சமவெளிப் பகுதிக்குத் திரும்பும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். எக்காரணத்தைக் கொண்டும் சுற்றுலா வாகனங்கள் குன்னூர் பர்லியார் வழியாகக் கீழே இறங்க அனுமதி இல்லை என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களைத் தவிர மற்ற அனைத்து கனரக வாகனங்களுக்கும் உதகை நகருக்குள் வர நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காலை 08:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை பால், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு வாகனங்கள் தவிர மற்ற கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூரிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் தலைகுந்தா மற்றும் புதுமந்து வழியாக நகருக்குள் வரலாம். உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த போக்குவரத்து மாற்றங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீலகிரி மாவட்ட காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.