அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்... பிஎஃப் கணக்கிலிருந்து 100% வரை பணம் எடுக்க அனுமதி!
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தனது 8 கோடிக்கும் அதிகமான நடப்புச் சந்தாதாரர்கள் பயன்பெறும் வகையில் ‘இபிஎஃப்ஓ 3.0’ என்ற புதிய மறுசீரமைப்பு விதிமுறைகளை முறைப்படி அறிவித்துள்ளது. மத்திய அரசு அண்மையில் அறிவித்த 'சமூக பாதுகாப்புச் சட்டம் 2026'-இன் ஒரு பகுதியாக, 1952-ஆம் ஆண்டின் பழைய சட்ட விதிகளுக்குப் பதிலாக ‘இபிஎஃப்ஓ திட்டம் 2026’ அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
பயணிகள் தங்களது அவசரத் தேவைகளுக்காகப் பணத்தை எடுக்கும் நடைமுறைகளை எளிமையாக்குவதே இந்த புதிய விதிகளின் முதன்மை நோக்கமாகும்.
இபிஎஃப்ஓ வரலாற்றிலேயே முதன்முறையாக, பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கான பழைய 13 சிக்கலான காரணங்கள் சுருக்கப்பட்டு, 3 எளிய பொதுப் பிரிவுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 12 மாதங்கள் (1 வருடம்) தொடர்ச்சியாகப் பணிபுரிந்திருந்தால், அவர் தனது கணக்கில் உள்ள தகுதியான தொகையில் 100 விழுக்காடு வரை (தொழிலாளி மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு முழுவதும்) முன்பணமாகப் பெற விண்ணப்பிக்கலாம்.
ஒரு ஊழியர் பணியில் நீடிக்கும் காலத்தில் அவசரத் தேவைக்காகப் பணம் எடுக்கும்போது, அவரது மொத்த பிஎஃப் தொகையில் 75% வரை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படும். ஓய்வூதியப் பாதுகாப்பிற்காக எஞ்சிய 25% தொகை கணக்கிலேயே வைத்திருக்கப்பட வேண்டும். இந்த எஞ்சிய 25% தொகைக்கு அரசு வழங்கும் 8.25% வட்டி வழக்கம் போல் தொடர்ந்து கிடைக்கும்.
ஒரு நபர் தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேல் வேலையில்லாமல் இருக்கும் பட்சத்தில் அல்லது 55 வயது பூர்த்தியாகி ஓய்வுபெறும் போது மட்டுமே, கணக்கில் உள்ள எஞ்சிய 25% தொகையையும் சேர்த்து 100% முழுப் பணத்தையும் கணக்கை முடித்து (Final Settlement) எடுக்க முடியும்.
புதிய விதிகளின்படி, சந்தாதாரர்கள் தங்களது மருத்துவச் செலவுகள், பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்குப் பணம் எடுக்கும் வரம்புகள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன.
விதிவிலக்கு: 'சிறப்புச் சூழ்நிலைகள்' என்ற புதிய பிரிவின் கீழ், சந்தாதாரர்கள் எந்தவொரு குறிப்பிட்ட காரணத்தையும் அல்லது ஆதாரங்களையும் சமர்ப்பிக்காமல், தங்களின் அவசரத் தேவைகளுக்காக ஆண்டிற்கு இரண்டு முறை நேரடியாகப் பணம் எடுக்க விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் முறையற்ற ஆவணங்கள் எனக் கூறி பிஎஃப் கிளைம்கள் நிராகரிக்கப்படுவது முற்றிலும் தவிர்க்கப்படும்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இபிஎஃப்ஓ முழுமையாக நவீனமயமாக்கப்பட்டுள்ளது. யுஏஎன் , ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு ஆகியவை முறையாக இணைக்கப்பட்ட கணக்குகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பித்த 3 வேலை நாட்களுக்குள் பணம் நேரடியாக வங்கி கணக்கிற்கு மாற்றப்படும் .
இனி பிஎஃப் கணக்கு விபரங்கள், பிபிஓ ஆர்டர்கள் மற்றும் கணக்கு மாற்றச் சான்றிதழ்களைப் பயனர்கள் தங்களது 'டிஜிலாக்கர்' செயலி மூலமாகவே நேரடியாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 12% பங்களிப்பு என்ற தற்போதைய கட்டாய நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதிய வரம்பான ₹15,000-க்குக் கீழ் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே இந்த 12% என்பது கணக்கிடப்படும்.
மத்திய அரசின் புதிய விளக்கத்தின்படி, சட்டப்பூர்வ வரம்பைத் தாண்டிய கூடுதல் தொகையைத் தங்களது விருப்பத்தின் பேரில் செலுத்தி வரும் ஊழியர்கள், தங்களுக்கு விருப்பமில்லையெனில் அந்த கூடுதல் தொகையைக் குறைத்துக் கொள்ளவோ அல்லது நிறுத்திக் கொள்ளவோ முழு உரிமை உண்டு. இதன் மூலம் ஊழியர்களின் கையில் கிடைக்கும் நிகரச் சம்பளம் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.