‘முதலிரவு’ அறையில் புதுமாப்பிள்ளையை அலற விட்ட புதுப்பெண்.. இதென்ன புது தினுசா இருக்கே!

 

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள ஜகதீஷ்புரத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சமீபத்தில் கோலாகலமாகத் திருமணம் முடிந்தது. மணக்கோலத்தில் புகுந்த வீட்டுக்கு வந்த புதுப்பெண்ணை, உறவினர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று முதலிரவு அறைக்கு அனுப்பி வைத்தனர். தன் மனைவி வெட்கத்துடன் கனிவாகப் பேசுவாள் என எதிர்பார்த்துக் காத்திருந்த மணமகனுக்கு, அந்த அறைக்குள் நுழைந்ததுமே காத்திருந்தது ஒரு மிகப்பெரிய ‘ஷாக்’.

அறைக்குள் வந்ததும் தனது சுயரூபத்தைக் காட்டிய அந்தப் புதுப்பெண், “எனக்கு 90 லட்சம் ரூபாய் ரொக்கமாகக் கொடுத்தால் தான் முதலிரவு நடக்கும், இல்லையென்றால் கிடையாது” என அதிரடியாகக் கண்டிஷன் போட்டு மாப்பிள்ளையை அலறவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் எதிர்ப்பு தெரிவிக்கவே, அறைக்குள்ளேயே இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் பெண்ணுக்கு அறிவுரை சொல்ல முயல, நிலைமை இன்னும் மோசமானது. அந்தப் பெண் தனது குடும்பத்தாருக்குத் தகவல் கொடுத்து வரவழைக்க, கல்யாண வீடே போர்க்களமாக மாறியது.

பெண் வீட்டார் வந்ததும் மாப்பிள்ளை வீட்டாரை வீட்டின் உள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டு, சமையல் கேஸ் சிலிண்டர் குழாயைத் திறந்துவிட்டு வீட்டைக் கொளுத்த முயற்சி செய்துள்ளனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களைக் காப்பாற்றிய நிலையில், அந்தச் சமயம் பார்த்துப் புதுப்பெண் தனது மாமியாரின் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த விலை உயர்ந்தப் பொருட்களைச் சுருட்டிக்கொண்டு நைசாக எஸ்கேப் ஆகிவிட்டார். "எனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை, நகை மற்றும் பணம் தருவதாகச் சொன்னதால் தான் சம்மதித்தேன்" எனப் போகிற போக்கில் அந்தப் பெண் சொன்ன வாக்குமூலம் அனைவரையும் அதிரவைத்தது.

இந்த விவகாரத்தில் போலீசார் முதலில் நடவடிக்கை எடுக்கத் தயங்கிய நிலையில், மாப்பிள்ளை வீட்டார் நீதிமன்றத்தை நாடிய பிறகே தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தை முன்னின்று நடத்திய புரோக்கர் தான் இந்த மோசடிக்கு முக்கியக் காரணம் எனத் தெரிய வந்துள்ளதால், அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முதலிரவு அறையில் தொடங்கி சொத்துக்களைச் சுருட்டியது வரை அந்தப் பெண் நடத்திய இந்தத் திட்டமிட்ட நாடகம், ஆக்ரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.