தமிழகத்தில் அடுத்த அதிரடி... டாஸ்மாக் கடைகளைத் தனியார்மயமாக்க அரசு தீவிர ஆலோசனை?!

 

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலில், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட பார்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தனியார்மயமாக்க தவெக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற உடனே, பொதுமக்கள் மற்றும் பெண்களின் நீண்டகால கோரிக்கைகளை ஏற்று டாஸ்மாக் கடைகளைக் குறைப்பதற்கான முதற்கட்ட பணிகளைத் தொடங்கியது.

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகாமையில் அமைந்து, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 717 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு முதலமைச்சர் விஜய் சில தினங்களுக்கு முன்பு அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

717 கடைகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த டாஸ்மாக் கட்டமைப்பையும் சீரமைக்க அரசு தற்பொழுது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் பில் முறைகேடுகள், கூடுதல் விலை வசூல் (எம்.ஆர்.பி-க்கு மேல் ₹10 வசூலிப்பது), போலி மதுபான புழக்கம் மற்றும் பார்களுக்கான டெண்டர் முறைகேடுகள் போன்ற பல்வேறு நிர்வாகச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு விரும்புகிறது.

இந்தத் தொடர் புகார்களை முழுமையாக ஒழிக்க வேண்டுமானால், சில்லறை விற்பனையைத் தற்காலிகமாகவோ அல்லது பகுதியாகவோ தகுதியுள்ள தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது சரியாக இருக்கும் எனத் தொழிற்துறை வல்லுநர்கள் அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் அரசிடமிருக்கும் கூடுதல் நிர்வாகச் சுமையைக் குறைக்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும் முடியும் என அரசு நம்புவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.