தமிழக அரசியலில் அடுத்த சர்ச்சை... ரவுடி ராஜாவுடன் இருக்கும் அமைச்சர் ஜெகதீஸ்வரியின் புகைப்படம் வைரல்!
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜெகதீஸ்வரி, தென் மாவட்டங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
தவெக அமைச்சரவையில் உள்ள அமைச்சர் டி. சரத்குமார் மீதான வீடியோ சர்ச்சை மாநில அரசியலில் புயலைக் கிளப்பியுள்ள இதே நாளில், கட்சியின் மற்றொரு மக்கள் பிரதிநிதி தொடர்பான விவகாரமும் தற்போது பேசுபொருளாகியுள்ளது:
தவெக கட்சியின் சார்பில் ராஜபாளையம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.ஜெகதீஸ்வரி, தென் மாவட்டங்களில் முக்கியக் குற்றப் பின்னணி கொண்டவராகக் அறியப்படும் ராக்கெட் ராஜாவுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
ராக்கெட் ராஜா மீது தென் மாவட்டங்களின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு தீவிரமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு முக்கிய மக்கள் பிரதிநிதி, பத்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு நபருடன் ஏன், எப்போது சந்திப்பு மேற்கொண்டார் என்ற கேள்வி அரசியல் தளத்தில் எழுப்பப்பட்டு வருகிறது.
தவெக அரசு அமைந்த இந்த ஒரு மாத காலத்திற்குள்ளேயே, கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது, அக்கட்சியின் உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.
இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், இது குறித்து ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜெகதீஸ்வரி தரப்பிலிருந்தோ அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிடம் இருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமோ அல்லது மறுப்போ வெளியிடப்படவில்லை.
இந்தப் புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது, ஏதேனும் பொது நிகழ்வின் போது தற்செயலாக எடுக்கப்பட்டதா அல்லது திட்டமிட்ட சந்திப்பா என்பது குறித்த விபரங்கள் எம்.எல்.ஏ-வின் விளக்கத்திற்குப் பின்னரே முழுமையாகத் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர் சர்ச்சைகள் தவெக தொண்டர்கள் மத்தியிலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.