தவெகவில் அடுத்த சர்ச்சை... மரகதம் குமரவேல் பிரமாணப் பத்திரத்தில் முரண்பாடுகள்!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் மரகதம் குமரவேல் தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் வயது, வருமானம் மற்றும் கடன்கள் குறித்துப் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி தேர்தல் ஆணையத்திற்குப் புகார் அனுப்பப்பட்ட சம்பவம் அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது வயதை 44 எனக் குறிப்பிட்டிருந்த மரகதம் குமரவேல், சில மாதங்களிலேயே தாக்கல் செய்த புதிய பத்திரத்தில் தனது வயதை 43 எனக் குறைத்துக் காட்டியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது 5 ஆண்டுகளுக்கான வருமானம் ரூ.1.8 கோடி எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போதைய இடைத்தேர்தல் ஆவணத்தில் அது ரூ.40 லட்சம் எனக் காட்டப்பட்டுள்ளது.
2023-24 ஆம் ஆண்டிற்கான வருமானம் ரூ.12.57 லட்சத்தில் இருந்து ரூ.4.12 லட்சமாகக் குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகவும், 2025-26 நிதியாண்டுக்கான வருமான விவரங்கள் முற்றிலுமாக விடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளரின் கணவருக்குக் கரூர் வைஸ்யா வங்கியில் இருந்த ரூ.19 லட்சம் கடன் விவரங்கள் மற்றும் சில வங்கிக் கணக்கு விவரங்கள் தற்போதைய மனுவில் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கோவை காங்கிரஸ் நிர்வாகி பிரபு என்பவர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள இந்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 125A-இன் கீழ் 11 வகையான விதிமீறல்களில் ஈடுபட்ட வேட்பாளர் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளார். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் இந்த விவகாரம் இடைத்தேர்தல் களத்தில் சூடான விவாதமாக மாறியுள்ளது.