அடுத்த சர்ச்சை... ‘ஊனமுற்றோர்’ எனக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் அருண் ராஜ்!

 

சென்னையில் நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் பேசிய சொற்பிரயோகம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் அருண் ராஜ், மாற்றுத்திறனாளிகளைக் குறிக்க ‘ஊனமுற்றோர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அரசு அமைப்புகளிலும் சட்டப்பூர்வ நடைமுறைகளிலும் கண்ணியப்படுத்தும் விதமாக 'மாற்றுத்திறனாளிகள்' என்ற சொல்லே அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு மாற்றுத்திறனாளி அமைப்புகளும் பல்வேறு தரப்பினரும் தங்களது கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

முன்னதாக திமுக ஆட்சிக் காலத்தில் மூத்த தலைவரான துரைமுருகன் இதேபோன்று மாற்றுத்திறனாளிகளைக் குறிக்கத் தவறான சொல்லைப் பயன்படுத்தியபோது எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியது குறிப்பிடத்தக்கது.

பொதுவெளியிலும் அரசு மேடைகளிலும் மக்கள் பிரதிநிதிகள் பேசும்போது கூடுதல் கவனத்துடனும், மாற்றுத்திறனாளிகளின் சுயமரியாதையைப் போற்றும் வகையிலும் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.