அடுத்த அதிர்ச்சி... நூலகத்தில் பாலியல் குற்றவாளி 'ஜெம் வீரமணி' பற்றிய புத்தகம்!

 

தமிழக நூலகங்களில் தரம் குறைந்த புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகத் தொடர்ந்து கடுமையான சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், ஆவடி அரசு நூலகத்தில் போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் 'ஜெம் வீரமணி' என்பவரின் சுயசரிதைப் புத்தகம் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள அரசு கிளை நூலகத்தில், 'ஜெம் வீரமணியின் பயணங்கள் - பாடங்கள்' என்ற தலைப்பிலான புத்தகம் வாசகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

கோவையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை மற்றும் வன்கொடுமை இழைத்ததாகப் பதிவு செய்யப்பட்ட கடுமையான போக்சோ வழக்கின்கீழ் கைது செய்யப்பட்டு, தற்போது சிறை தண்டனை அனுபவித்து வரும் நபர் ஆவார்.

சிறுமிகளுக்குப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு குற்றவாளியின் பெயரிலும், அவரது வாழ்க்கை வழிகாட்டுதல் என்ற பெயரிலும் அரசு நூலகத்தில் புத்தகம் இடம்பெற்றிருப்பது வாசகர்களையும் சமூக ஆர்வலர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில் போலி எழுத்தாளர்கள் பெயரிலும், ஒரே பதிப்பகத்தின் வாயிலாகவும் பல மடங்கு அதிக விலைக்குப் புத்தகங்கள் வாங்கப்பட்டதாகப் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், போக்சோ வழக்கில் கைதான நபரின் சுயசரிதைப் புத்தகமும் அரசுப் பணத்தில் கொள்முதல் செய்யப்பட்டு ஆவடி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, நூலகத் துறையின் தேர்வுக்குழு மற்றும் கொள்முதல் முறைகேடுகளின் தீவிரத்தை மேலும் அம்பலப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட புத்தகத்தை உடனடியாக நூலகத்திலிருந்து அகற்றுவதோடு, இத்தகைய சர்ச்சைக்குரிய புத்தகத்தைக் கொள்முதல் செய்யப் பரிந்துரைத்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.