நாடு முழுவதும் அடுத்த அதிர்ச்சி.. இண்டிகோ விமானத்தில் கைக்குழந்தை, லக்கேஜ் கூடுதல் சேவைக் கட்டணங்கள் உயர்வு!

 

இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ, உள்நாட்டு விமானப் பயணிகளுக்கான விருப்பச் சேவைக் கட்டணங்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தியுள்ளது. இது கைக்குழந்தைகளுடன் பயணிப்போர், கூடுதல் லக்கேஜ் எடுத்துச் செல்வோருக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

அடிப்படை விமான டிக்கெட் கட்டணத்தில் எத்தகைய மாற்றமும் செய்யப்படாத போதிலும், பயணிகள் வழக்கமாகப் பயன்படுத்தும் விருப்பச் சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. குறைந்த கட்டணச் சேவையை வழங்கிவரும் இந்நிறுவனம், தனது செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்கும் பொருட்டுக் கட்டணக் கட்டமைப்பில் இந்த மாற்றங்களை உடனடியாக அமல்படுத்தியுள்ளது.

2 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை மடியில் அமர்த்தி அழைத்துச் செல்வதற்கான ஒரு வழிப் பயணக் கட்டணம், ரூ.2,000-லிருந்து ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (ரூ.1,000 உயர்வு). இதன் காரணமாக, இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் கொண்ட குடும்பப் பயணத்தில் குழந்தைகளுக்கான கட்டணம் மட்டும் ரூ.6,000 வரை அதிகரிக்கும். 3 நாட்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வயதுச் சான்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாகும்.

அனுமதிக்கப்பட்ட எடையைக் கடந்து கொண்டு செல்லப்படும் கூடுதல் லக்கேஜ்களுக்கு, இதற்கு முன்பு ஒரு கிலோவிற்கு ரூ.700 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது கிலோவிற்கு ரூ.800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தனியாகப் பயணிக்கும் சிறுவர்களுக்கான கட்டணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.5,999 ஆகவும், முன்னுரிமை செக்-இன் மற்றும் போர்டிங் சேவைக்கான கட்டணம் ரூ.450-ல் இருந்து ரூ.650 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணச் சான்றிதழுக்கான கட்டணம் ரூ.200-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.