அடுத்த அதிர்ச்சி... 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக நிர்வாகி!

 

சேலம் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவர், வறுமையில் வாடும் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டியதாக எழுந்துள்ள பாலியல் புகார் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சேலம் மாநகரக் காவல் ஆணையர் இந்த விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நேரடி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

சேலம் வீரபாண்டி பகுதி தவெக நிர்வாகியாக வலம் வந்த மணிகண்டன் என்பவர், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மற்றும் வறுமையில் வாடும் பெண்களைக் குறிவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களுக்குப் பண உதவி செய்வதாகக் கூறி ஆசை வார்த்தைகள் பேசி, பழகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அப்பெண்களுக்குத் தெரியாமல் அவர்களின் தனிப்பட்ட அசைவுகளை ஆபாச வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பின்னர், அந்த வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி அப்பெண்களைத் தொடர்ந்து மிரட்டி வந்ததாகப் புகார் மனுவில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டியது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட பெண்களைத் தனது நண்பர்களின் ஆசைக்கு இணங்குமாறு மணிகண்டன் கட்டாயப்படுத்தியுள்ளார். மறுப்புத் தெரிவித்த பெண்களைத் தொடர் மிரட்டல்கள் மூலம் அடிபணிய வைத்து, அவர்களைக் கட்டாய விபச்சாரத்தில் தள்ளியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடர் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், துணிச்சலுடன் சேலம் மாநகரக் காவல் ஆணையரகத்தில் முறைப்படி புகார் அளித்துள்ளார்.

புகாரின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்ட சேலம் காவல் ஆணையர், உடனடியாக வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகி மணிகண்டனைக் கைது செய்யத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தச் சட்டவிரோத கும்பலில் தொடர்புடைய மணிகண்டனின் நண்பர்கள் மற்றும் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.