அடுத்த அதிர்ச்சி... சிக்கன் துண்டு தொண்டையில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு - உடலை மறைக்க முயன்ற 4 நண்பர்கள் கைது!

 

ஓசூர் அருகே உணவருந்தும் போது தொண்டையில் சிக்கன் துண்டு சிக்கி மூச்சுத்திணறி ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் உடலை அப்புறப்படுத்திய 4 நண்பர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடத்தூரைச் சேர்ந்த சிவப்பா (40) என்ற ஓட்டுநர், ஓசூர் பாகலூரில் வசித்து வந்தார். கடந்த 20-ஆம் தேதி பாகலூர் தேவிரப்பள்ளி பகுதியில் இவர் மர்மமான முறையில் உயிரிழந்துக் கிடந்தார். பாகலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி நடத்திய பிரேதப் பரிசோதனையில், அவரது தொண்டையில் சிக்கன் இறைச்சித் துண்டு சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டதாலேயே சிவப்பா உயிரிழந்தார் என்பது உறுதியானது.

சம்பவத்தன்று நண்பர்கள் வெங்கடேஷ், ராஜேஷ், சீனிவாஸ் மற்றும் தேஜூ ஆகியோருடன் இணைந்து சிவப்பா மது அருந்தியுள்ளார். அப்போது சிக்கன் சாப்பிட்ட சிவப்பாவின் தொண்டையில் இறைச்சித் துண்டு அடைத்து மூச்சுத்திணறலால் மயங்கி விழுந்துள்ளார். சிவப்பா மயங்கியதும் அவர் இறந்து விட்டதாகக் கருதிய நண்பர்கள் 4 பேரும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்று அப்பகுதியில் உள்ள பாறை மீது உடலைப் போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். உண்மையை மறைத்து உடலை அப்புறப்படுத்த முயன்ற குற்றத்திற்காக ராஜேஷ் உட்பட 4 பேரையும் பாகலூர் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.