அடுத்த அதிர்ச்சி... பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல்!
தென்சீனக் கடல் பகுதியில் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாக எல்லைச் சர்ச்சை நிலவி வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனக் கடலோரக் காவல் படையினர் ‘வாட்டர் கேனான்’ மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் சர்வதேசப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்சீனக் கடலின் மிக முக்கியமான மற்றும் சர்ச்சைக்குரிய ஸ்கார்பரோ ஷோல் கடல் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஸ்கார்பரோ ஷோல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அரசின் ரோந்து கப்பல்களும், அந்நாட்டு மீனவர்களின் படகுகளும் சென்று கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த சீனக் கடலோரக் காவல் படைக்கப்பல்கள், பிலிப்பைன்ஸ் கப்பல்களை நோக்கித் தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிவேகமாகத் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அத்துமீறலில் ஈடுபட்டன. இந்தத் தாக்குதலின் போது, ஒரு சீனக் கப்பல் பிலிப்பைன்ஸ் படகின் மிக அருகே ஆபத்தான முறையில் வந்து மோதும் நிலையை உருவாக்கியது.
தென்சீனக் கடல் பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது: நடப்பு வாரத்தில் மட்டும் சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு இடையே நடைபெறும் 3-வது மோதல் சம்பவம் இதுவாகும்.
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் தங்களது கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததால் நடவடிக்கை எடுத்ததாகச் சீனா நியாயம் கற்பிக்கிறது. அதேவேளையில், தங்கள் நாட்டுப் பகுதியில் அமைதியாகச் சென்ற கப்பல்கள் மீது சீனா தேவையின்றி வம்பு இழுப்பதாகப் பிலிப்பைன்ஸ் அரசு கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது.
இரு நாடுகளும் ஒன்றையொன்று பரஸ்பரம் குற்றம்சாட்டி வருவதால், தென்சீனக் கடல் பகுதியில் பெரும் ராணுவப் பதற்றமும் அமைதியின்மையும் நிலவி வருகிறது.