அதிமுகவிற்கு அடுத்த அதிர்ச்சி? அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று ராஜினாமா செய்கிறார்?!

 

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிவடைந்து புதிய ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள சூழலில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து விலகி வருவது அக்கட்சியின் தலைமைக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 3 முக்கிய எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், இன்று அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நெல்லை மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க அரசியல் பிரமுகரும், அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான டாக்டர் இசக்கி சுப்பையா, அதிமுகவின் தற்போதைய செயல்பாடுகளில் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

நேற்று மே 25-ஆம் தேதி, தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்.எல்.ஏ சத்யபாமா ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது சட்டமன்றப் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள் மூவரும் சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்துத் தங்களது ராஜினாமா கடிதங்களை சமர்ப்பித்த சில மணி நேரங்களிலேயே, முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தங்களைத் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

மூன்று விக்கெட்டுகள் சரிந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள், தென்மாவட்டத்தின் முக்கிய முகமாக விளங்கும் இசக்கி சுப்பையாவும் இன்றுதனது பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெக-வில் இணைய உள்ளதாக வெளியாகும் செய்திகள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மூத்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் தங்களது கட்சியின் பலம் மேலும் குறைவதைத் தடுக்க அதிமுக தலைமை அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது. எனினும், இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு இன்று மதியத்திற்கு மேல் தனது இறுதி முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகத் தமிழக அரசியல் களம் மீண்டும் தகிக்கும் நிலைக்கு மாறியுள்ளது.