மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. தமிழ்நாட்டில் அரிசி விலை 30% வரை கிடுகிடு உயர்வு!

 

தமிழ்நாட்டில் நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய உணவுப் பொருளான அரிசியின் விலை கடந்த சில மாதங்களில் கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய விலை நிலவரம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் சுமாராக 95 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இதில் சுமார் 75 முதல் 80 லட்சம் டன் அரிசி மாநிலத்திற்குள்ளேயே உற்பத்தியாகிறது. இதில் 10 லட்சம் டன் மோட்டா ரக அரிசி கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து 25 லட்சம் முதல் 30 லட்சம் டன் அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் அதிகம் விரும்பப்படும் பொன்னி அரிசி ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்தே கொண்டுவரப்படுகிறது.

கடந்த சில மாதங்களில் மட்டும் அரிசியின் விலை 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது கிலோவுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.1,450 முதல் ரூ.2,500 வரை விற்றுவந்த 30 கிலோ பாசுமதி அரிசி தற்போது ரூ.1,950 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.4,900-க்கு விற்கப்பட்ட 30 கிலோ சீரகச்சம்பா அரிசி தற்போது ரூ.5,400 வரை விற்கப்படுகிறது.

மழைப்பொழிவு குறைவால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறுவது சரியல்ல என்றும், தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் இன்னும் 90 நாட்களில் அடுத்தகட்ட நெல் விளைச்சல் சந்தைக்கு வந்துவிடும் என்றும், எனவே மாநிலத்தில் அரிசிக்கு எத்தகைய தட்டுப்பாடும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் துறைசார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.