நேபாளத்தில் அடுத்த அதிர்ச்சி... சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் 5.3 ஆக பதிவு!

 

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைப் பலி கொண்ட பெருவெள்ளம் சமீபத்தில் ஏற்பட்ட நேபாள நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள முஸ்தாங் மாவட்டத்தில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே சுமார் 375 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோமன்தாங் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

நேற்று இரவு 9.53 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நேபாள நாட்டுத் தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் முஸ்தாங் மாவட்டத்தின் அண்டை மாவட்டங்களான மனாங், டோல்பா மற்றும் மியாக்டி ஆகிய பகுதிகளிலும் தீவிரமாக உணரப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பீதி ஏற்பட்டது. இருப்பினும், இதன் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் அல்லது உயிர்சேதம் குறித்த உடனடித் தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.