தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி... காஞ்சிபுரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வடமாநிலத் தொழிலாளி கைது!
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே, கட்டுமானப் பணிக்காக வந்த வடமாநிலத் தொழிலாளி ஒருவர், 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டின் உரிமையாளர், தனது வீட்டில் சில கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இந்தத் தரைத்தள மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகப் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர் அங்குப் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அங்கு வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, அந்த வீட்டு உரிமையாளரின் 10 வயது சிறுமிக்குத் தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்து வந்துள்ளார்.
வடமாநிலத் தொழிலாளியின் இந்த செயலால் நிலை குலைந்த அந்தச் சிறுமி, தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்துத் தனது பெற்றோரிடம் அழுதுக் கொண்டே விவரித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக மணிமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்று இச்சம்பவம் குறித்து புகாரளித்தனர்.
பெற்றோரின் புகாரை உடனடியாகப் பெற்றுக் கொண்ட மணிமங்கலம் போலீசார், இச்சம்பவம் குறித்துப் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக முயன்ற பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவருடன் பணிபுரிந்த மற்ற தொழிலாளர்களிடமும் இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.