அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி... பதவியை ராஜினாமா செய்கிறார் சி.வி.சண்முகம்!
தவெக அரசுக்கு ஆதரவளித்த விவகாரத்தில் அதிமுகவில் எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையிலான அதிருப்தி அணிக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கும் இடையே மோதல் முற்றியிருந்த நிலையில், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
எஸ்பி வேலுமணி தரப்பு மீண்டும் இபிஎஸ் தலைமையுடன் சமாதானமாகி மன்னிப்புக் கடிதம் வழங்கிவிட்ட சூழலில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் இன்னும் பிடி கொடுக்காமல் தனித்து விடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக அவர் தனது மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டு வருவதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் கூட்டணி, புதிய தவெக அரசுக்குத் தங்களது மறைமுக ஆதரவைத் தெரிவித்து வந்தது. ஆனால், கட்சிக்குள்ளேயே தவெகவிற்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்பட்டால் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை உணர்ந்த எஸ்பி வேலுமணி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், திடீரென எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துத் தங்களது மன்னிப்புக் கடிதத்தை ஒப்படைத்தனர்.
இதனால் வேலுமணி தரப்பில் இருந்த மற்ற எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மீண்டும் இபிஎஸ்-இன் ஒற்றைத் தலைமையின் கீழ் வந்துவிட்டனர். ஆனால், இந்தத் திடீர் சமாதான முடிவில் சி.வி.சண்முகத்திற்கு உடன்பாடில்லை எனக் கூறப்படுகிறது.
வேலுமணி தரப்பு இபிஎஸ் பக்கம் சாய்ந்ததைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தனது தீவிர ஆதரவாளர்களுடனும் மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடனும் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
"தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் காட்டும் பிடிவாத போக்கு மற்றும் உட்கட்சி அணுகுமுறைகள் எப்போதுமே அதிமுகவின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. சுயநல அரசியல் முடிவுகளுக்கு நான் ஒருபோதும் துணைப் போகப் போவதில்லை" என்று அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.
ஏற்கனவே 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டனர். வேலுமணியும் கையை விரித்துவிட்டதால், அதிமுகவிற்குள் தொடர்ந்து நீடிப்பதா அல்லது மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுப்பதா என்ற இக்கட்டான சூழலுக்குச் சி.வி.சண்முகம் தள்ளப்பட்டுள்ளார்:
நாளை கடிதம் சப்மிட்?: எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் இனி பணியாற்றப் போவதில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ள சி.வி.சண்முகம், நாளை தனது மயிலம் தொகுதி எம்.எல்.ஏ பதவியை முறைப்படி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் ராஜினாமா செய்ய உள்ளதாக போயஸ் கார்டன் மற்றும் விழுப்புரம் அரசியல் வட்டாரங்களில் மிகத் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தான் தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்ற சி.வி.சண்முகம், தற்போது நிலவும் உட்கட்சி பூசலால் எம்.எல்.ஏ பதவியையும் துறக்கத் துணிந்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.