திமுகவில் அடுத்த அதிர்ச்சி... முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு!

 

திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு அரசுக்குக் பல கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் தீவிர வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரிப் பகுதியில் உரிய அனுமதியின்றிச் சட்டவிரோதமாகப் பெருமளவில் மண் திருடப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதன் காரணமாக அரசுக்குச் சுமார் ரூ.8.22 கோடி வரை பெருமளவு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டது.

ஏரி மண் முறைகேடு தொடர்பாக எழுந்த தீவிர குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொண்டு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

தேர்தல் களமும் அரசியல் பிரசாரங்களும் உச்சத்தில் இருக்கும் வேளையில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நேரடியாக வழக்குப் பதிவு செய்துள்ள நிகழ்வு எதிர்க்கட்சிகள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.