விளாத்திக்குளத்தில் அடுத்த அதிர்ச்சி... திருமணக் கோலம் கலைவதற்குள் நடந்த துயரம்!

 

திருமணமான ஒரே மாதத்தில் குடும்பத் தகராறு காரணமாக புது மாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த குளத்தூர் அண்ணா நகர் காலனியைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது மகன் அழகு மாரியப்பன் (29). தனியார் பேருந்து ஒன்றில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவருக்கும், புதியம்புத்தூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி வெகு விமரிசையாகத் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே அழகு மாரியப்பன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல வீட்டில் குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்றார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை யாரும் எதிர்பாராத விதமாகத் தனது வீட்டின் அருகே உள்ள ஆட்டுத் தொழுவத்தில் அழகு மாரியப்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காலையில் எழுந்து வெளியே வந்த பெற்றோர், மகன் சடலமாகத் தொங்குவதைக் கண்டு கதறித் துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து குளத்தூர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான உண்மையான காரணம் குடும்பத் தகராறு தானா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்திலேயே புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.