செஞ்சி அருகே அடுத்த அதிர்ச்சி... 6 வயது மகனைக் கிணற்றில் வீசிய தந்தை  - 3 மணி நேர போராட்டத்திற்குப் பின் சடலமாக மீட்பு!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குடும்பத் தகராறு காரணமாகப் பெற்ற 6 வயது மகனைத் தந்தையே விவசாயக் கிணற்றில் தூக்கி வீசிக் கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள நல்லான்பிள்ளைபெற்றால் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவரது மனைவி தேவி (35). இந்தத் தம்பதிக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடைசியாகப் பிறந்த 6 வயது ஆண் குழந்தை சஞ்சய் இருந்தான்.

கடன் வாங்கிய பணத்தைச் செலவு செய்தது தொடர்பாகக் கணவன்-மனைவி இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு இன்று காலையிலும் தீவிரமாக நீடித்துள்ளது.

தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வராஜ் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் தனது 6 வயது மகன் சஞ்சயைத் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

நல்லான்பிள்ளைபெற்றால் அரசு மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள விவசாயக் கிணற்றில் சிறுவன் சஞ்சயை செல்வராஜ் தூக்கி வீசியுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாகச் சத்தியமங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பெண்ணாத்தூர் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கித் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கிணற்றில் அதிகளவில் தண்ணீர் இருந்ததால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது.

சுமார் 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு சிறுவன் சஞ்சயின் உடல் சடலமாக மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சத்தியமங்கலம் காவல்துறையினர், தந்தை செல்வராஜைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான்கு பெண் குழந்தைகளுக்குப் பிறகு ஆசையாகப் பிறந்த ஒரே ஆண் குழந்தையை, குடும்பத் தகராறில் தந்தையே கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.