அடுத்த அதிர்ச்சி... பெட்ரோலை முந்திய டீசல் விலை... லிட்டருக்கு ₹25 அதிகரிப்பு!
சர்வதேசச் சந்தையில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள தனியார் பெட்ரோல் பங்குகளில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
தனியார் நிறுவனமான ஷெல், இன்று முதல் தனது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்துள்ளது. லிட்டருக்கு ₹25.01 அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் டீசல் விலை ₹123.52 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ₹7.41 உயர்த்தப்பட்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் ₹119.385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வழக்கமாகப் பெட்ரோலை விட டீசல் விலை குறைவாகவே இருக்கும். ஆனால், தற்போது ஷெல் பங்குகளில் பெட்ரோலை விட டீசல் விலை சுமார் ₹4 அதிகமாக விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மற்றொரு தனியார் நிறுவனமான நயாரா, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5.30-ம், டீசல் விலையை ₹3-ம் உயர்த்தியிருந்தது. பெட்ரோல் ₹107.93; டீசல் ₹97.22. ஷெல் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் நயாராவில் விலை சற்று குறைவாக இருந்தாலும், பொதுத்துறை பங்குகளை விட இது அதிகமாகவே உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான் - இஸ்ரேல்) தொடர்ந்து நடைபெற்று வரும் போரின் காரணமாகக் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை, தனியார் எண்ணெய் நிறுவனங்களை விலையை உயர்த்தத் தூண்டியுள்ளது.
மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியைக் குறைத்துள்ளதால், இந்தியன் ஆயில் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளில் விலை மாற்றம் இன்றி நிலவி வருகிறது. இதனால் தனியார் பங்குகளைத் தவிர்த்துவிட்டுப் பொதுமக்கள் பொதுத்துறை பங்குகளை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.