அடுத்த அதிர்ச்சி... நாளை முதல் ஆரோக்யா பால், தயிர் விலை லிட்டருக்கு ₹4 உயர்வு!
இந்தியாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பால் உற்பத்திப் பாதிப்பு காரணமாக, முன்னணி தனியார் நிறுவனமான ஆரோக்யா பால் நிறுவனம் நாளை முதல் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ₹4 உயர்த்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு அடுத்தகட்ட விலையேற்ற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் பால் உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் பால் நிறுவனங்கள் தங்களது வணிகத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து போட்டி போட்டுக் கொண்டு கூடுதல் விலைக்குப் பாலைக் கொள்முதல் செய்து வருகின்றன. இவ்வாறு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினங்களையும் இழப்புகளையும் சரிகட்டவே, இந்த விலையேற்ற முடிவைத் தனியார் நிறுவனங்கள் எடுத்துள்ளன.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாத இறுதி வாரத்தில் அனைத்து தனியார் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தியிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் விலையை உயர்த்தியுள்ளன.
நாளை முதல் ஆரோக்யா மற்றும் ஹட்சன் நிறுவனங்களின் புதிய மாற்றியமைக்கப்பட்ட விலை விபரங்களின்படி, 500 மில்லி (அரை லிட்டர்) பாக்கெட் சமன்படுத்தப்பட்ட பால்: ₹29-ல் இருந்து ₹31 ஆக உயர்கிறது. நிலைப்படுத்தப்பட்ட பால்: ₹35-ல் இருந்து ₹37 ஆக உயர்கிறது. கொழுப்புச் சத்து செரிவூட்டப்பட்ட பால்: ₹39-ல் இருந்து ₹41 ஆக உயர்கிறது.
1000 மில்லி (1 லிட்டர்) பாக்கெட் சமன்படுத்தப்பட்ட பால்: ₹54-ல் இருந்து ₹57 ஆக உயர்கிறது. நிலைப்படுத்தப்பட்ட பால்: ₹66-ல் இருந்து ₹69 ஆக உயர்கிறது. கொழுப்புச் சத்து செரிவூட்டப்பட்ட பால்: ₹73-ல் இருந்து ₹76 ஆக உயர்கிறது. ஹட்சன் தயிர்: ₹42-ல் இருந்து ₹44 ஆக உயர்கிறது. ஆரோக்யா தயிர்: ₹40-ல் இருந்து ₹42 ஆக உயர்கிறது.
முன்னணி நிறுவனமான ஆரோக்யா பால் விலையை உயர்த்தியுள்ளதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற இதர தனியார் பால் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்தக்கூடும் என்பதால் நடுத்தரக் குடும்பங்கள் பெரும் கவலையடைந்துள்ளன.