அடுத்த அதிர்ச்சி... போலி டாக்டரான தவெக பிரமுகரால் வாலிபர் உயிரிழப்பு!
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு மின் நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தபாபு (45) என்பவர் தற்போது போலீசாரிடம் சிக்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியப் பிரமுகரான இவர், சேத்தியாத்தோப்பு பகுதியில் சொந்தமாக ஒரு மருந்துக்கடை நடத்தி வருகிறார். இதோடு முறையான மருத்துவம் எதுவும் படிக்காமலேயே, ஆசைக்காகத் தன்னை ஒரு பெரிய மருத்துவர் போலக் காட்டிக்கொண்டு ஏழை எளிய நோயாளிகளுக்கு ஊசி போடுவது, மாத்திரைகள் தருவது என போலி மருத்துவராகவும் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பு.ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் என்பவரது 24 வயதுடைய மகன் ராகுல், எதிர்பாராத விதமாகப் பூச்சிமருந்து (விஷம்) குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு பதறிப்போன அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவசர அவசரமாக ராகுலை சிகிச்சைக்காக ஆனந்த்பாபு நடத்தி வரும் மெடிக்கலுக்கு நேற்றிரவு கொண்டு சென்றுள்ளனர். அங்கு வந்திருப்பது உயிருக்குப் போராடும் நோயாளி என்றும் பாராமல், அந்தப் போலி டாக்டர் ஆனந்த்பாபு ராகுலுக்குத் தவறான அவசரச் சிகிச்சை அளித்துள்ளார்.
போலி டாக்டரின் இந்தத் தவறான சிகிச்சையின் காரணமாக, வாலிபர் ராகுல் எவ்வித பலனுமின்றி மெடிக்கலிலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். முறையான மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் போலி டாக்டரிடம் காட்டியதால் தான் தங்களது மகன் இறந்து விட்டதாக ராகுலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்கச் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் நேற்றிரவு முறையீடு செய்தனர்.
புகாரின் அடிப்படையில் களமிறங்கிய போலீசார், உயிரோடு விளையாடிய போலி டாக்டர் ஆனந்த்பாபு மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும், உயிரிழந்த ராகுலின் உடலானது சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அந்தப் போலி டாக்டர் மீது அடுத்தகட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.