அடுத்த அதிர்ச்சி... புழல் சிறையில் விசாரணை கைதி திடீர் மரணம்!
சென்னை புழல் மத்திய சிறையில் கஞ்சா வழக்கில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சிறை வளாகத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி ( 44). இவர் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலையூர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அவரை, கடந்த ஜூலை 12-ஆம் தேதியன்று போலீசார் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி பாலாஜிக்கு இன்று மதிய வேளையில் திடீரென கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சிறைக்காவலர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரது நிலைமை மோசமடைந்ததை அடுத்து, மேல் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அவசர அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பாலாஜி பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகச் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். சிறையில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விதிமுறைகளின்படி அடுத்தகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.