“ஆளுநரை ‘Who are you’ எனக் கேட்டவர் இன்று லோக்பவனைச் சுற்றி சுற்றி வருகிறார்” - உதயநிதியை கலாய்த்த அமைச்சர் ராஜ்மோகன்!
சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும், முந்தைய திமுக ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும் கடுமையாக விமர்சித்தார். “அன்று ஆளுநரை ‘Who are you’ எனக் கேட்டவர் இன்று லோக்பவனைச் சுற்றிச் சுற்றி வருகிறார்” என உதயநிதியை விமர்சித்த அவர், பள்ளிக்கல்வித் துறை மற்றும் ‘AI புத்தக ஊழல்’ குறித்து திமுக பதில் சொல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “சில மாதங்களுக்கு முன்பு உதயநிதி பேசிய வீடியோவைப் பார்த்தேன். அன்று ஆளுநரை ‘Who are you’ எனக் கேட்டவர், இன்று லோக்பவனைச் சுற்றிச் சுற்றி வருகிறார்” என விமர்சித்தார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அதேநேரம், “திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார். அது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. வசந்தம் கார்த்திகேயன் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த கால ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன எனக் குற்றம் சாட்டிய ராஜ்மோகன், “தனியார் பள்ளிகளுக்குச் சான்றிதழ் வழங்க 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ.40 லட்சம் பெற்றுக்கொண்டு, அதற்கெனத் தனியே அலுவலகம் அமைத்துச் செயல்பட்டது குறித்துப் பாதிக்கப்பட்ட 177 பள்ளிகள் புகார் கொடுத்ததன் பேரில் முன்னாள் அமைச்சர் வெளியே வர முடியாமல் விசாரணை நடைபெறுகிறது” என்று கூறினார்.
“பெரியார் அறிவுலகம், தனியார் பள்ளிகளுக்கான அனுமதி எனப் பல்வேறு ஊழல்கள் அரங்கேறியுள்ளன. எல்லாப் புள்ளிகளையும் இணைத்துப் பார்த்தால் கண்டிப்பாக அது ஒரு ‘கரை வேட்டி’ கிட்டத்தான் போய் நிற்கும். ‘World’s First AI ஊழலுக்கு’ திமுக பதில் சொல்லும்; அதில் நிச்சயம் பல முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு இருக்கும். யாரும் இனிமேல் தப்பிக்கவே முடியாது” என அமைச்சர் ராஜ்மோகன் காட்டமாகத் தெரிவித்தார்.