“என் உயிருடன் வாழ்ந்தவர்...” கிட்டாரிஸ்ட் சதானந்தம் மறைவுக்கு இளையராஜா உருக்கமான இரங்கல்!

 

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக்குழுவில் பல ஆண்டுகளாக முன்னணி கிட்டார் இசைக்கலைஞராகப் பணியாற்றி வந்த 'சதானந்தம்' மறைந்ததை அடுத்து, அவருக்கு இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமான முறையில் எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது ஆரம்ப காலம் முதல் நீண்ட நாட்களாகத் தன்னோடு இணைந்து பயணித்த இசைக்கலைஞர் சதானந்தத்தின் மறைவு செய்தி கேட்டுத் தான் மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்ததாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

"காலமானவர்களை நான் அந்த நிலையில் நேரில் சென்று பார்ப்பது கிடையாது; அதை நான் விரும்புவதும் இல்லை. மறைந்த சதானந்தத்தின் ஆத்மா இறைவனின் அடியில் சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்" என்று தனது இரங்கல் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜாவின் ஆயிரக்கணக்கான காலத்தால் அழியாத தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படப் பாடல்களில் தனது அற்புதமான கிட்டார் இசையால் தனித்துவமான முத்திரை பதித்தவர் சதானந்தம். அவரது மறைவு திரை இசை உலகிலும், சக இசைக்கலைஞர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.