மத்திய அமைச்சரின் வீடுக்கு தீவைப்பு!! மணிப்பூரில் நீடிக்கும் வன்முறை..!!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மேதேயி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட வன்முறை ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
அதாவது, மணிப்பூர் மாநிலத்தின் மக்கள் தொகையில் மேதேயி சமூக மக்கள் 53 சதவீதம் உள்ளனர். இவர்களை பட்டியல் பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 3ஆம் தேதி முதன்முதலாக நடந்த அமைதிப் பேரணியில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது.
பின்னர் இது வன்முறையாக மாறி மணிப்பூர் மாநிலம் முழுவதும் பரவி பற்றி எரிந்து வருகிறது. இதுவரை 105 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
சில காலம் அமைதியாக இருந்த நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. குடியிருப்புகளில் புகுந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், மணிப்பூரின் கமென்லாக் கிராமத்தில் புகுந்து குகி சமூகத்தை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் மேதேயி சமூகத்தை சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக குகி சமூகத்தை சேர்ந்த மாநில அமைச்சர் நெம்சாவின், இம்பால் நகரில் உள்ள வீட்டை மர்ம நபர்கள் நேற்றுமுன்தினம் தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கு ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டடது. சம்பவப் பகுதியில் அதிரடிப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்கின் வீட்டுக்கு நள்ளிரவில் வன்முறையாளர்கள் தீ வைத்தனர். இதனால் மாநிலம் முழுவதும் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு பாதுகாப்பு படையினர், ராணுவனத்தினர் குவிக்கப்பட்டும் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை.
முன்னதாக வன்முறையின் தொடக்கத்தின்போது ஆயுத கருவூலம், காவல்நிலையங்களில் புகுந்து ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை வன்முறையாளர்கள் எடுத்துச்சென்றனர். இதனால் இரு தரப்பினரிடம் ஆயுதங்கள் உள்ளதால் வன்முறை நீடித்து வருகிறது.